போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயற்சி: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

பெங்களூருவில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2019-04-29 22:34 GMT
பெங்களூரு, 

நேபாள நாட்டை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா (வயது 39). இவர், சிக்பேட்டை பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 24-ந் தேதி மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே வைத்து ராகேஷ் சர்மா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபால்சிங் ஆகிய 2 பேரும் மர்மநபர்களால் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்களிடம் பணம் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையில், கடத்தல்காரர்கள் பிடியில் இருந்து மறுநாள்(25-ந் தேதி) கோபால்சிங் மட்டும் தப்பித்தார்.

பின்னர் தன்னையும், ராகேஷ் சர்மாவையும் மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர்களிடம் இருந்து தான் தப்பித்து வந்து விட்டதாகவும் கூறி உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ராகேஷ் சர்மாவை கடத்தியது ரவுடியான மன்சூர் கான், அவரது கூட்டாளிகள் என்று தெரிந்தது. இதையடுத்து, கடத்தல்காரர்களிடம் இருந்து ராகேஷ் சர்மாவை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் கடந்த 25-ந் தேதி நள்ளிரவில் சிக்பேட்டை அருகே வைத்து கடத்தல்காரர்களிடம் இருந்து ராகேஷ் சர்மாவை தனிப்படை போலீசார் மீட்டனர்.

அந்த சந்தர்ப்பத்தில் போலீசாரிடம் சிக்காமல் கடத்தல்காரா்கள் தப்பித்து விட்டனர். மீட்கப்பட்ட ராகேஷ் சர்மாவை கடத்தல்காரர்கள் பலமாக தாக்கி இருந்ததால், அவர் காயம் அடைந்திருந்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தலைமறைவான மன்சூர் கான் உள்ளிட்ட கடத்தல்காரர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் பின்புறத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் மன்சூர் கான் தனது கூட்டாளியுடன் பதுங்கி இருப்பதாக உப்பார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் பதுங்கி இருந்த மன்சூர் கான், அவரது கூட்டாளியை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களில் மன்சூர் கானின் கூட்டாளியை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் மன்சூர் கானை பிடிக்க போலீஸ்காரர் ஜெயசந்திரா முயன்றார். அப்போது திடீரென்று தன்னிடம் இருந்த கத்தியால் ஜெயசந்திராவை மன்சூர் கான் குத்தினார். இதில், அவரது கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து தப்பி செல்ல மன்சூர்கான் முயன்றார்.

இதையடுத்து, வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சரண் அடைந்து விடும்படி மன்சூர் கானை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரா எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்துவிட்டு மீண்டும் போலீசாரை தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பிக்கவும் முயற்சித்தார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மன்சூர் கானை நோக்கி ஒரு முறை சுட்டார்.

இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு, மன்சூர் கான், போலீஸ்காரர் ஜெயசந்திரா ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரவி டி.சென்னன்னவர் விசாரணை நடத்தினார். அப்போது மன்சூர் கான்(வயது 23) அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், ரவுடியான அவர் மீது கொலை முயற்சி, கடத்தல், கொள்ளை, வழிப்பறி உள்பட 7 வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. மேலும் வழக்கு ஒன்றில் ராகேஷ் சர்மாவும், மன்சூர் கானும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராகேஷ் சர்மாவை மன்சூர் கான் கடத்தி பணம் கேட்டு மிரட்டி இருந்தார்.

அதே நேரத்தில் ராகேஷ் சர்மாவின் கூட்டாளி என நினைத்து கோபால் சிங்கையும் கடத்தி சென்றிருந்தது தெரியவந்துள்ளது. கைதான மன்சூர் கானின் கூட்டாளி மணிப்பூரை சேர்ந்த அப்துல் மஜித்(25) என்று தெரிந்தது. அவர்கள் 2 பேர் மீதும் உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்