மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 92.4 சதவீதம் பேர் தேர்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 92.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக செல்போனுக்கு வந்தது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே மதிப்பெண் விவரத்தை அறிந்து கொண்டனர். ஒருசிலர் மட்டுமே பள்ளிக்கு வந்து மதிப்பெண் விவரத்தை தகவல் பலகையில் பார்த்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 347 பள்ளிகளை சேர்ந்த 25 ஆயிரத்து 610 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 937 மாணவர்களும், 12 ஆயிரத்து 673 மாணவிகளும் அடங்குவர். அதில் 11 ஆயிரத்து 598 மாணவர்கள், 12 ஆயிரத்து 66 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 664 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,339 மாணவர்கள், 607 மாணவிகள் என மொத்தம் 1,946 பேர் தோல்வி அடைந்தனர்.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியவர் களில் 92.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் 91.6 சதவீதம் ஆகும். இதன்மூலம் இந்த ஆண்டு 0.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வத்தலக் குண்டு, வேடசந்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் திண்டுக்கல் கல்வி மாவட்டம் 92.79 சதவீதமும், பழனி கல்வி மாவட்டம் 92.18 சதவீதமும், வத்தலக்குண்டு கல்வி மாவட்டம் 93.34 சதவீதமும், வேடசந்தூர் கல்வி மாவட்டம் 90.34 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. அந்த வகையில் வத்தலக்குண்டு கல்வி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.