சிவகங்கை அருகே அரசு மதுபான கடையில் ரூ.6½ லட்சம் கொள்ளை

சிவகங்கை அருகே அரசு மதுபான கடையின் கதவை உடைத்து ரூ 6 லட்சத்து 60 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-04-29 23:00 GMT

சிவகங்கை,

சிவகங்கை தாலுகா கூட்டுறவுபட்டியை அடுத்த தேவன் கோட்டை கிராமத்தில் அரசு மதுபானக் கடை செயல்பட்டுவருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக கண்ணன் என்பவரும், விற்பனையாளர்களாக கோவிந்தன், வேல்முருகன் ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் ஆகியோர் கடையை அடைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவ்வாறு செல்லும் போது கடந்த 3 நாட்கள் மதுபான விற்பனை பணம் ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்தை கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றனராம்.

நள்ளிரவில் சில மர்ம நபர்கள் மதுபானக் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 நாள் மதுபான விற்பனை பணமான ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனராம்.

பின்னர் உள்ளே விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை எடுத்து கடையின் வாசல் முன்பு அருந்தி சென்றுள்ளனர். இதை காலையில் அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் மதுபானக்கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதும், வாசல் முன்பு காலி மதுபாட்டில்கள் சிதறிக்கிடப்பதையும் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் உள்ளிட்ட போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற மதுபானக்கடைக்கு வந்து விசாரணை செய்தனர். போலீஸ் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர் துப்பறியும் நாய் லைக்கா கொண்டு வரப்பட்டு, அது மதுபானக்கடையில் இருந்த மோப்பம் பிடித்தபடி சென்று சற்று தொலைவில் உள்ள மெயின் ரோட்டில் வந்து நின்றுவிட்டது.

மதுபானக்கடையில் உள்ள பணப்பெட்டியை உடைத்தால், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணிற்கு குருந்தகவல் அனுப்பும் ட்ராக்கிங் எனப்படும் சிறப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. கொள்ளையடிக்க உள்ளே புகுந்த மர்ம நபர்கள் முதலில் அந்த கருவியை ஆயுதத்தால் தாக்கி சேதப்படுத்திய பின்பு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த மதுபானக் கடையை பற்றி நன்கு அறிந்தவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்