புயல், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாக்க தென்னைக்கு நீர்ப்பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும் கலெக்டர் அறிவிப்பு

புயல், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாக்க தென்னைக்கு நீர்ப்பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-29 22:45 GMT

சிவகங்கை,

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– புயல், மழை போன்ற காலங்களில் மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தென்னை மரங்களைப் பொறுத்தவரை மகசூல் தரும் தென்னை மரங்களில் தலைப்பாகத்தில் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை போன்றவை அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தினால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ, முறிந்து விழுவதற்கோ வழி வகுக்கும். எனவே, இளம் ஓலைகளைத் தவிர்த்து, மீதமுள்ள பச்சை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றி விடுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனால், மரம் காற்று வேகத்தை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம். புயல், மழை காலங்களில் எதிர்கொள்ளவிருக்கும் நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்கு நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதனால், தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இறுகி மரம் சாய்ந்துவிடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களின் வயல்களில் மழை நீர் தேங்கியிருந்தால், தண்ணீரை வடித்து வடிகால் வசதியினை நன்றாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல் வாழை தோப்பை சுற்றி வடிகால் வாய்க்கால் அமைத்து மழை நீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். அறுவடைக்கு தயாராக உள்ள காய், கனிகளை புயலுக்கு முன்னதாகவே அறுவடை செய்திட வேண்டும். மூங்கில் அல்லது சவுக்கு கம்புகளை கொண்டு பலத்த காற்றினால் சாயாத வண்ணம் முட்டு கொடுத்திட வேண்டும்.

அனைத்து தோட்டக்கலைப் பயிர்களுக்கும் நீர் பாய்ச்சுவதை 2 நாட்களுக்கு முன்பே நிறுத்தி விடுவதன் மூலம் வேர்பகுதி இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம். மா, பலா, முந்திரி போன்ற தோட்டக்கலை மரங்களில் பக்கவாட்டு கிளைகளையும், அதிகப்படியான இலைகளையும் வெட்டி விடுவதன் மூலம் மரம் வேரோடு சாய்வதை தவிர்க்கலாம்.

விவசாயிகள் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கனமழை மற்றும் பலத்த காற்றின் பாதிப்பிலிருந்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்