பெருந்துறை சிப்காட்டுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு; 6 மாதமாக வீணாகும் தண்ணீர் உடனே சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

பெருந்துறை சிப்காட்டுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 6 மாதமாக தண்ணீர் வீணாகிறது. இதை உடனே சரிசெய்யவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Update: 2019-04-29 23:00 GMT

பெருந்துறை,

பெருந்துறையில் உள்ள பவானி ரோட்டில், வாவிக்கடை பகுதியில் பெருந்துறை பழைய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய், புதிய திருப்பூர் குடிநீர் திட்ட குழாய் மற்றும் பெருந்துறை சிப்காட் திட்ட காவிரி குழாய் என 3 குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய்கள் ஒன்றோடு ஒன்றாக நெருக்கமாக பதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெருந்துறை சிப்காட்டுக்கு செல்லும் குழாயில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் பவானியில் இருந்து வரும் காவிரி குடிநீர் பெருக்கெடுத்து வீணாக ஓடுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைப்பை சரி செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அது முழு பலனை அளிக்கவில்லை.

அதன்பின்னர் உடைப்பை சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டதால் இதுவரை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வீணாக ஓடுகிறது.

24 மணி நேரமும் குழாயில் இருந்து வீணாக வெளியேறும் காவிரி குடிநீர், அருகிலுள்ள பள்ளம் வழியாக சென்று கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்கு கீழேயுள்ள குட்டையில் சேகரம் ஆகிக்கொண்டிருக்கிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சூலக்காத்தான்வலசை சேர்ந்த ரங்கசாமி என்பவர் கூறும்போது, ‘கடுமையான வறட்சி நிலவும் இந்த நேரத்தில், மக்களின் அத்தியாவசிய தேவையான காவிரி குடிநீர் இப்படி வீணாகி கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

இதுபற்றி குடிநீர் வடிகால் வாரியத்திடம் பல முறை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படி வீணாகும் காவிரி குடிநீரை முறையாக குழாய் மூலம் கொண்டு சென்றால் அது பெருந்துறை நகரின் தினசரி குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும். அந்த பகுதி மக்கள் தண்ணீர் வீணாவதை தடுக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதற்குள் அரசு அதிகாரிகள் விரைந்து குழாயில் உள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும்‘ என்றார்.

மேலும் செய்திகள்