வைகை அணையில் மூழ்கி நெசவுத்தொழிலாளி பலி - நீர்மாலை எடுக்க சென்ற போது பரிதாபம்
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மூழ்கி நெசவுத்தொழிலாளி பலியானார்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி கீழப்புதுத்தெருவை சேர்ந்த முனியாண்டி என்பவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதனையடுத்து அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு முன்பு, உறவினர்கள் நீர்மாலை எடுப்பது வழக்கம். அதன்படி இறந்தவரின் உறவினர்கள், நீர்மாலை எடுப்பதற்காக நேற்று மதியம் வைகை அணைக்கு சென்றனர். வைகை அணையில், மதுரைக்கு குடிநீர் எடுக்கும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தனர். அப்போது முனியாண்டியின் உறவினரான சக்கம்பட்டியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி அம்மமுத்து (வயது 52) என்பவர் எதிர்பாராதவிதமாக அணையில் மூழ்கினார். இதனைக்கண்ட உறவினர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தண்ணீரில் அவர் அடித்து செல்லப்பட்டு மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பாகவே அம்மமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.