குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-04-29 21:45 GMT
ஓமலூர், 

ஓமலூர் பேரூராட்சி 14-வது வார்டு கள்ளிகாடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

எனவே ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக குடிநீருக்காக தினமும் பொதுமக்கள் அல்லல் பட்டு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கள்ளிக்காடு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் வினியோகம் செய்யாததால், கடும் சிரமத்துடன் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி முற்றுகையில் ஈடுபட்டோம். தொடர்ந்து குடிநீர் வினியோகிக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்