தேக்குமரங்கள் வெட்டி கடத்தல்: உதவி செயற் பொறியாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு கோர்ட்டு உத்தரவின் பேரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை
தேக்கு மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் கோர்ட்டு உத்தரவின்பேரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு உதவி செயற்பொறியாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூரில் உள்ள பாரதிரோடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 51), பல் டாக்டர். இவருக்கு சொந்தமான நிலம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்னவெங்காயப்பள்ளியில் உள்ளது. இங்கு 1 ஏக்கர் பரப்பளவில் 200-க்கும் மேற்பட்ட தேக்குமரங்களை வாசுதேவன் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு வாசுதேவன் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றார். அப்போது வாசுதேவனின் அக்காள் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்த செண்பகம், அவரது கணவரும், ஓய்வுபெற்ற பொது பணித்துறை அதிகாரியுமான சின்னதம்பி, இவர்களது மகனும், பொது பணித்துறை உதவி செயற் பொறியாளருமான பொதுபணி திலகம் ஆகிய 3 பேரும் சேர்ந்து வாசுதேவன் நிலத்தில் இருந்த 175 தேக்குமரங்களை வெட்டி கடத்தினர்.
இதுகுறித்து வாசுதேவன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் வாசுதேவன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, திருப்பத்தூர் கோர்ட்டை அணுக உத்தரவிட்டார். அங்கு மனு தாக்கல் செய்த பிறகு திருப்பத்தூர் கோர்ட்டு ஜோலார்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்பேரில் செண்பகம், அவரது கணவர் சின்னதம்பி, அவர்களது மகன் பொதுபணி திலகம் ஆகிய 3 பேர் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.