எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 90.41 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட 3.2 சதவீதம் குறைவு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் நாகை மாவட்டத்தில் 90.41 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 3.2 சத வீதம் குறைவாகும்.

Update: 2019-04-29 22:45 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் செல்போன் மற்றும் கணினி மூலம் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர். பள்ளிகளிலும் தேர்வு முடிவுகள் ஓட்டப்பட்டதால், பள்ளிக்கு நேரிலும் சென்று ஆர்வமுடன் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து சென்றனர்.

நாகை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 983 மாணவர்களும், 10 ஆயிரத்து 604 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 587 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 734 மாணவர்களும், 9 ஆயிரத்து 878 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 612 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்ட அளவில் மொத்தம் 90.41 சதவீதம் தேர்ச்சி விகிதமாகும். கடந்த ஆண்டு 93.61 சதவீதம் தேர்ச்சி விகிதமாக இருந்தது. தற்போது தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை விட 3.2 சதவீதம் குறைவாகும். மாநில அளவில் நாகை மாவட்டம் 31-வது இடத்தில் உள்ளது.

நாகை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடநல உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 6-ம், சீர்காழி கல்வி மாவட்டத்தில் 4-ம் என மொத்தம் 40 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மொத்தம் 90.41 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவு. கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பால் பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்தன. மாணவர்கள் போதிய மின்வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இயற்கை மாற்றத்தின் காரணமாக மாணவ-மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டனர். இது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பெரும்பாலும் பாதித்தது. நடப்பாண்டில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தகுந்த கூட்டங்கள் நடத்தி அதன் மூலம் மாணவர்களின் கல்வி தகுதியை பெருக்க வழிவகை செய்வோம். வரும் ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கல்வி துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்