ஓமலூர் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
ஓமலூர் அருகே திருமணம் ஆன 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
ஓமலூர்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கோட்டை மேடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 25). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகள் சங்கீதா (19) என்பவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சங்கீதாவின் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே புதுமணத்தம்பதிகள் கோட்டைமேட்டில் உள்ள ஹரிகிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புதுப்பெண் சங்கீதா கணவருடன், தனது தந்தை குப்புசாமி வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் காலை ஹரிகிருஷ்ணன் வியாபாரத்துக்கு சென்று விட்டார். சங்கீதாவின் பெற்றோரும் வெளியே சென்று விட்டதாக தெரிகிறது.
வீட்டில் தனியாக இருந்த சங்கீதா, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சங்கீதாவுக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆவதால் மேட்டூர் சப்-கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.