மாம்பலம் ரெயில் நிலையத்தில் பரிதாபம் பெற்றோர் கண்எதிரே மின்சார ரெயில் மோதி சிறுவன் பலி

மாம்பலம் ரெயில் நிலையத்தில் பெற்றோர் கண் எதிரே மின்சார ரெயில் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.;

Update: 2019-04-29 22:15 GMT
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண்கோபால். தொழில் அதிபர். இவருடைய மகன் ஆதித்யா(வயது 9). அருண்கோபால் தனது குடும்பத்துடன் சென்னை தியாகராயநகர் வந்தார்.

பின்னர் மீண்டும் மின்சார ரெயிலில் வீட்டுக்கு செல்வதற்காக மாம்பலம் ரெயில் நிலையம் வந்தார். சிறுவன் ஆதித்யா, மாம்பலம் ரெயில் நிலைய நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது அவன், திடீரென நடைமேடையில் இருந்து நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்து விட்டான். அதற்குள் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயில் சிறுவன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சிறுவன் ஆதித்யா, தனது பெற்றோர் கண்எதிரேயே அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது ரெயில் நிலையத்தில் இருந்த சகபயணிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பலியான சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாம்பலம் ரெயில்வே போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்