எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு, கடலூர் மாவட்டத்தில் 92.86 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் 92.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடலூர்,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இத்தேர்வில் கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் 92.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 430 பள்ளிக்கூடங்களைச்சேர்ந்த 35 ஆயிரத்து 512 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். அவர்களில் 32 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 92.86 சதவீத தேர்ச்சியாகும்.
தேர்வு எழுதிய 18 ஆயிரத்து 28 மாணவர்களில் 16 ஆயிரத்து 302 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 17 ஆயிரத்து 484 மாணவிகளில் 16 ஆயிரத்து 673 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 90.43 ஆகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 95.36 ஆகவும் உள்ளது.
கடந்த கல்வி ஆண்டை விட இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் 1.33 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் 91.53 ஆக இருந்தது. இந்த கல்வி ஆண்டில் 92.86 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் கடலூர் மாவட்டம் 30-வது இடத்தில் இருந்து 28-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
கடலூர் மாவட்ட கல்வித் துறைக்கு வழிகாட்டுதல் வழங்கிய கலெக்டர் அன்புசெல்வன், மண்டல தேர்வு அலுவலராக பணியாற்றிய தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் கழக செயலாளர் பழனிசாமி, மாவட்ட தேர்வு பணி கண்காணிப்பு அலுவலராக பணியாற்றிய அரசு தேர்வுகள் இணைஇயக்குனர்(மேல்நிலை) சேதுராமவர்மா மற்றும் கடுமையாக உழைத்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி கூறினார். அப்போது மாவட்ட கல்வி அதிகாரி சுந்தரமூர்த்தி, நேர்முக உதவியாளர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.