விருத்தாசலத்தில், ரெயில்வே பெண் ஊழியர்களை மர்மநபர் விரட்டியதால் பரபரப்பு
விருத்தாசலத்தில் ரெயில்வே பெண் ஊழியர்களை மர்மநபர் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ரெயில் நிலையமாக விளங்குவது விருத்தாசலம் ரெயில் நிலையம். இங்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகிறார்.
அந்த வகையில் திருச்சியை சேர்ந்த பூர்ணிமா (வயது 29), கேரளாவை சேர்ந்த பீனா (36), ரம்யா (32), ஆகிய 3 பெண் ஊழியர்களும் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் 3 பெண் ஊழியர்களும் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசினார். மேலும் அவர்களை அந்த நபர் துரத்த தொடங்கினார். இதில் பதறிய அந்த 3 பெண்களும் தண்டவாளத்தில் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த நபர் அவர்களை ஓட ஓட துரத்தி சென்றார். இதில் அவர்கள் ஓடும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தனர். அந்த காயங்களுடன் அவர்கள் ஓடி விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்து அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.
அதன்பிறகு அவர்களை சக ஊழியர்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் ரெயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஊழியர்களை துரத்திய மர்ம நபர் யார்? என தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் ஊழியர்களை மர்ம நபர் ஒருவர் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.