கற்கள் விழுந்ததன் எதிரொலி: கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
கற்கள் விழுந்ததன் எதிரொலியாக கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்த மலையில் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழும் இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ச்சியுடன் குளித்து விட்டு திரும்புவார்கள்.
கோடை காலம் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை போன்ற ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அருவிக்கு வந்து சுற்றுலா பயணிகள் குளித்தனர். அப்போது அந்த நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து கற்கள் விழுந்தன. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்தவாறு அருவியில் இருந்து வெளியேறினர்.
இந்தநிலையில் இந்த அருவிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் கொல்லிமலை வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்து உள்ளனர். இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வீழ்ச்சி பகுதியில் கொல்லிமலை வனச்சரகர் தமிழ்அழகன் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா உத்தரவின்பேரில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றனர்.