பொம்மிடியில் ஆசிரியர் உள்பட 2 பேரின் வீடுகளில் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
பொம்மிடியில் ஆசிரியர், மெக்கானிக் ஆகிய 2 பேரின் வீடுகளில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அமிரத் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருடைய மனைவி போதும்பெண். இவர்கள் 2 பேரும் பொம்மிடி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர் தம்பதிக்கு சொந்த ஊர் காரைக்குடி ஆகும். இவர்கள் கோடை விடுமுறைக்காக வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்று இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை சேகரின் வீட்டு கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சேகருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் நேற்று பொம்மிடிக்கு விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த டி.வி., பீரோவில் வைத்திருந்த நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபகுதியை சேர்ந்தவர் சியாவுதீன். இருசக்கர வாகன மெக்கானிக். இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 67 ஆயிரம், 3½ பவுன் நகை ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து சேகர், சியாவுதீன் ஆகியோர் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், பொம்மிடி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர்.
இந்த 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.