களியக்காவிளை அருகே பரபரப்பு சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம்

களியக்காவிளை அருகே சினிமா தியேட்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2019-04-29 23:00 GMT
களியக்காவிளை,

களியக்காவிளை அருகே தனியாருக்கு சொந்தமான சினிமா தியேட்டர் உள்ளது. அந்த தியேட்டரில் நேற்று எமன்டன் பிரேமகதா என்ற மலையாள படம் ஒளிபரப்பானது. இந்த படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். படம் ஒளிபரப்பான ஒரு மணி நேரத்தில் திடீரென ஆபரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர புகை கிளம்பியது. இதை கண்ட ரசிகர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

உடனே தியேட்டரில் இருந்த ஊழியர்கள், தீ அணைப்பான்கள் மூலம் புகை கிளம்பிய பகுதியில் அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், தீ மள மளவென பரவியது.

இதுபற்றி கேரள மாநிலம் பாறசாலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ பரவியதால், குழித்துறையில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக ஆபரேட்டர் அறையில் இருந்த அனைத்து எந்திரங்களும் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக தியேட்டரில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்