அருணாசலேஸ்வரர் கோவிலில் சீரமைக்கப்பட்ட தங்கத் தேர் வெள்ளோட்டம் கலெக்டர் தேர் இழுத்தார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சீரமைக்கப்பட்ட தங்கத் தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதில் கலெக்டர் கந்தசாமி பங்கேற்று தேர் இழுத்தார்.

Update: 2019-04-29 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கத் தேர் அமைக்கப்பட்டது. இந்த தேர் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இழுக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து தங்கத் தேர் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.4 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, கோவிலில் உள்ள 3-ம் பிரகாரத்தில் வெள்ளோட்டம் செய்யப்பட்டது.

இந்த தங்கத் தேர் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, விசேஷ நாட்கள் மற்றும் விழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் தான் தங்கத் தேர் இழுக்கப்படும். இந்த தேரை நேர்த்தி கடனாக இழுப்பதற்கு கோவில் நிர்வாகத்தில் ரூ.1,500 செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி காலையில் பக்தர்கள் மூலம் தங்கத் தேர் இழுக்கப்பட்டது. அப்போது நிலையில் இருந்து தேர் புறப்பட்ட சிறிது தொலைவில் தேரின் விமானம் உள்ள மேல் பீடம் சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து தேர் 3-ம் பிரகாரம் சுற்றி இழுக்கப்பட்டு தங்கத் தேர் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து அறநிலையத்துறை சார்பில் உடனடியாக தங்கத் தேர் சீரமைக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று தங்கத் தேர் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று காலை தங்கத் தேரை இழுத்து 3-ம் பிரகாரத்தில் வெள்ளோட்டம் செய்தார்.

முன்னதாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் உற்சவ சிலை பக்தர்களுடன் கலெக்டர் கந்தசாமி தோளில் சுமந்தவாறு தங்கத் தேருக்கு கொண்டு வந்தார்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், போலீசார் மற்றும் பணியாளர்கள் தங்கத் தேரை 3-ம் பிரகாரம் சுற்றி இழுத்து வந்து நிலையில் நிறுத்தினர்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத் தேரின் விமானம் உள்ள மேல் பீடம் சரிந்து விழுந்தது. தற்போது தேர் சீரமைக்கப்பட்டு, பிரகார பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனை சோதனை செய்யும் வகையில் பக்தர்களை போல கோவிலில் பணம் கட்டி தங்கத் தேரை இழுத்தேன்’ என்றார்.

மேலும் செய்திகள்