10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.56 சதவீதம் தேர்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் 20–வது இடத்தை பிடித்தது
10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட மாணவ – மாணவிகள் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் 10–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14–ந் தேதி தொடங்கி 29–ந் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் நேற்று காலை தங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று அங்கு ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை ஆர்வமாக பார்த்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16,420 மாணவர்கள், 16,450 மாணவிகள் என மொத்தம் 32,870 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 15,437 மாணவர்கள், 15,975 மாணவிகள் என மொத்தம் 31,412 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.56 சதவீதமாகும். கடந்த ஆண்டு நடந்த 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம 94.74 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்த வருடம் 0.82 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் 20–வது இடம் பிடித்துள்ளது. இதில் 118 அரசு பள்ளிகளும், 10 அரசு நிதியுதவி பள்ளிகளும், 110 தனியார் பள்ளிகள் என 238 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 325 அரசு பள்ளிகளில் இருந்து மொத்தம் 21,295 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 20,077 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 94.28 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் 16–வது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது.
மேற்கண்ட தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.