வேலூரில் இருந்து சித்தூருக்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி மினி வேனுடன் பறிமுதல் டிரைவரிடம் தீவிர விசாரணை
வேலூரில் இருந்து சித்தூருக்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி மினி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையிலான சிறப்புப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது வேலூரில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். மினி வேனில் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்த போது அது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அரிசியை, வேனுடன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று, வசந்தபுரத்தை சேர்ந்த வேன் டிரைவர் ராமச்சந்திரன் (வயது 42) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேலூர் வசந்தபுரம் மற்றும் கஸ்பா பகுதிகளில் ரேஷன் அரிசிகளை சேகரித்து அதை சித்தூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. மினி வேனில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட வேன், ரேஷன் அரிசி வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இந்த கடத்தலில் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.