துணை ராணுவ படைகளில் உதவி கமாண்டன்ட் பணி
323 பேர் சேர்ப்பு - துணை ராணுவ படைகளில் உதவி கமாண்டன்ட் பணி;
துணை ராணுவ படைகளில் உதவி கமாண்டன்ட் பணிக்கு 323 பேரை சேர்ப்பதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அரசின் பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமித்து வருகிறது. தற்போது மத்திய ஆயுதப்படை பிரிவுகளான துணை ராணுவ படைகளில் உதவி கமாண்டண்ட் தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஏ.சி. எக்ஸாம் 2019 அறிவிப்பை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது.
மொத்தம் 323 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். படைப்பிரிவு வாரியாக பி.எஸ்.எப். பிரிவில் 100 இடங்களும், சி.ஆர்.பி.எப். பிரிவில் 108 இடங்களும், சி.ஐ.எஸ்.எப். பிரிவில் 28 இடங்களும், ஐ.டி.பி.பி. பிரிவில் 21 இடங்களும், எஸ்.எஸ்.பி. பிரிவில் 66 இடங்களும் உள்ளன. ஆண்-பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1994 மற்றும் 1-8-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல் அளவு மற்றும் உடல்திறன் தேர்வு, நேர் காணல் மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள்.
உடல் தகுதி
விண்ணப்பதாரர் ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) 81 செ.மீ. மற்றும் 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறனும், எடையும் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கிறதா? என பரிசோதிக்கப்படும்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.200 மற்றும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-5-2019-ந் தேதி இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு 18-8-2019-ந் தேதி நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களை www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.