ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 7 மாவட்ட போலீசார் தூத்துக்குடி வருகை

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி 7 மாவட்ட போலீசார் நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர்.

Update: 2019-04-28 22:30 GMT
தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான 132 இடங்களில் மொத்தம் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 53 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் பணிக்காக தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர்.

இதில் 9 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 91 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 574 பேர் வந்து உள்ளனர்.

இவர்ளுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நேற்று விளக்கி கூறினார். அப்போது, போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அவர்களுக்கு உரிய பொறுப்புகள், அமைதியாக தேர்தல் நடப்பதற்கு எந்தவிதமாக பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்ராமு(நிர்வாகம்), வேதரத்திம்(மதுவிலக்கு), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரகாஷ்(நகரம்), முத்தமிழ்(புறநகர்) மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 257 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் ஆகிய இடங்களில் நடந்தது. இதில் வாக்குப்பதிவின் போது அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

மேலும் செய்திகள்