வளவனூர் அருகே, தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு - போலீசார் விசாரணை

வளவனூர் அருகே தி.மு.க. பிரமுகர் மர்மமான முறையில் இறந்தார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-28 22:45 GMT
வளவனூர்

வளவனூர் அருகே உள்ள பரசுரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 47). தி.மு.க. பிரமுகர். இவருடைய மனைவி பிரேமா(42). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். செல்வம் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர் அதே பகுதியில் உள்ள விளைநிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். இருப்பினும் அவர் எவ்வாறு இறந்தார்? என்பது பற்றி தெரியவில்லை.

இதையடுத்து செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் பிரேமா, வளவனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் செல்வம் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்