குடும்ப பிரச்சினையில் விபரீதம், தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை

குடும்ப பிரச்சினையில் விபரீதம், தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை - தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் ரஞ்சித்குமார்.

Update: 2019-04-28 23:15 GMT
செம்பட்டி, 
குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சி.கூத்தம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). இவர், பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி அனுசுயாதேவி (30). இவர் களுக்கு குரு ஹரிகிருஷ்ணன் (3) என்ற மகன் உள்ளான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமார் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ரஞ்சித்குமாருக்கும், அனுசுயாதேவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபித்துக்கொண்டு, நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுசுயாதேவி தனது மகனுடன் சென்றுவிட்டார். வீட்டில் ரஞ்சித்குமார் மட்டும் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை ரஞ்சித்குமார் பணிக்கு செல்லவில்லை. இதனால் அவரை வரச்சொல்வதற்காக அவருடைய செல்போன் எண்ணுக்கு பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து பல முறை தொடர்பு கொண்டனர். ஆனால் ரஞ்சித்குமார் போனை எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரரும், ரஞ்சித்குமாரின் நண்பருமான காங்குமணி என்பவரிடம் பட்டிவீரன்பட்டி போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் காங்குமணி சத்திரப்பட்டியில் பணியில் இருந்தார். இதனையடுத்து அவர், அதே ஊரில் வசிக்கும் தனது உறவினர் கவியரசனுக்கு போன் செய்து ரஞ்சித்குமார் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

அங்கு சென்று அவர் பார்த்தபோது, ரஞ்சித்குமாரின் வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, மின்விசிறியில் ரஞ்சித்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கி கொண்டிருந்த ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக ரஞ்சித்குமார் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்