பாளையங்கோட்டை கடையில் மடிக்கணினிகள் திருட்டு; ஊழியர் கைது
பாளையங்கோட்டை கடையில் மடிக்கணினிகளை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கணினி மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை உள்ளது. இதை பெருமாள்புரம் கே.எல்.என். காலனியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 37) என்பவர் நடத்தி வருகிறார்.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பார்வையிடும் வகையில் மடிக்கணினிகள் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கடையில் மொத்த மடிக்கணினி எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து விமல்ராஜ் கணக்குகளை சரிபார்த்தார்.
அப்போது 18 மடிக்கணினிகள் விற்பனை கணக்கில் வராமல், இருப்பிலும் இல்லாததால் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடை ஊழியர் ஒருவர் மடிக்கணினிகளை எடுத்து தனது பையில் வைப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடை ஊழியரான பெருமாள்புரம் திருமால் நகரை சேர்ந்த டார்வின் டெனிசன் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கடையில் திருடிய மடிக்கணினிகளை பாதி விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் டார்வின் டெனிசனை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஒரு சில மடிக்கணினிகள் மீட்கப்பட்டு உள்ளது.