திருவையாறு அருகே மணல் கொள்ளையை தடுக்கக்கோரி கிராம மக்கள் நூதன போராட்டம்

திருவையாறு அருகே மணல் கொள்ளையை தடுக்கக்கோரி கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றில் மனுவை வைத்து வழிபாடு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-28 23:00 GMT
திருவையாறு,

ஆறுகளில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் ஆறுகளின் நீர் உறிஞ்சும் தன்மை குறைந்து விடுகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தக் கூடிய ஆற்றலை ஆறுகள் இழந்து விடுகின்றன. இந்த நிலையில் நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்தும் ஆற்றல் படைத்த ஆற்று மணலை பாதுகாக்க வேண்டும்.

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவையாறு அருகே விளாங்குடி கிராம மக்கள் அங்கு உள்ள கொள்ளிடம் ஆற்றில் கோரிக்கை மனுவை வைத்து வழிபாடு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சினிமா உதவி இயக்குனர் மனோகுமரன், வக்கீல் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

ஆற்றில் நிறைய மணல் இருக்கிறதே என அள்ளி செல்கின்றனர். இன்றைய தேவையை மட்டும் கருதி மணலை அள்ளி எடுத்தால் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மணலை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. மணலின் அளவு ஆற்றில் குறைந்து கொண்டே இருந்தால் அருகே உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்கு கூட தண்ணீர் இல்லாத சூழல் ஏற்படும்.

இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீரில் இருந்த சுவை தற்போது இல்லை. இதற்கு மணலை அதிகளவு கொள்ளையடித்தது தான் காரணம்.

மணல் கொள்ளையால் குடிநீரில் உப்பு அதிகமாகி சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. எனவே மணலை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்