ஆரணியில், கள்ளச்சாவி மூலம் ஜவுளிக்கடையை திறந்து ரூ.11½ லட்சம் துணி பண்டல்கள் திருட்டு முன்னாள் ஊழியர், கள்ளக்காதலியுடன் கைது
ஆரணியில் ஜவுளிக்கடையை கள்ளச்சாவி மூலம் திறந்து ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் துணி பண்டல்களை திருடிய கடையின் முன்னாள் ஊழியர் மற்றும் அவருடைய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி,
செய்யாறை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 52). இவர் செய்யாறு மற்றும் ஆரணி மண்டிவீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்த ஆரணி தஞ்சூர் சமத்துவபுரத்தை சேர்ந்த தாஸ் (43) என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சோமசுந்தரத்தின் ஜவுளிக்கடையை முன்னாள் ஊழியர் தாஸ் திறந்து, அங்கிருந்து துணி பண்டல்களை வெளியே எடுத்து வந்து அடுக்கி வைத்தார். இதனை கண்ட பக்கத்து கடைகளின் இரவு நேர காவலாளிகள் அவரை பிடித்து விசாரித்தனர். அதற்கு தாஸ், கடையின் உரிமையாளர் தான் எடுத்து வர சொன்னார் என்று பதில் கூறினார். அவரின் பதிலில் திருப்தி அடையாத காவலாளிகள் செல்போன் மூலம் சோமசுந்தரத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அவர், கடையில் இருந்து துணி பண்டல்களை தாஸ் திருடி செல்வதாகவும், அவரை பிடித்து வைக்கும்படியும் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து காவலாளிகள் தாசை பிடித்து வைத்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த சோமசுந்தரம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் தாசை ஒப்படைத்தார். அவரிடம், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை ஆகியோர் விசாரித்தனர். அதில், ஜவுளிக்கடையை கள்ளச்சாவி மூலம் கடந்த 10 நாட்களாக திறந்து துணி பண்டல்களை திருடி சென்றதும், அதனை ஆரணி பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் கள்ளக்காதலி பிரபாவதி (35) வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தாஸ் கூறினார்.
இதையடுத்து போலீசார், கள்ளக்காதலி பிரபாவதி வீட்டிற்கு சென்று சோதனையிட்டு, அங்கிருந்த 39 துணி பண்டல்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட துணி பண்டல்களின் மதிப்பு ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தாஸ், அவருடைய கள்ளக்காதலி பிரபாவதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.