போலீசார் பாதுகாப்பு ஆலோசனை: தேவாலயங்களுக்கு பைகள் எடுத்து வர வேண்டாம்

போலீசார் பாதுகாப்பு ஆலோசனை: தேவாலயங்களுக்கு பைகள் எடுத்து வர வேண்டாம் கிறிஸ்தவ மக்களுக்கு ‘குறுந்தகவல்’ மூலம் வேண்டுகோள்.

Update: 2019-04-28 21:45 GMT
சென்னை,

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் பலியாகினர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

வேளாங்கண்ணி, சாந்தோம் போன்ற பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அனைத்து தேவாலயங்களும் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களை சேர்ந்த நிர்வாகிகள், பாதிரியார்களை அழைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் செயலாளர் துலிப் தங்கசாமி, ஆலயத்தின் உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள குறுந்தகவல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

எழும்பூர் போலீசார் வழங்கிய அறிவுரையின்படி, ஆலயத்துக்கு வரும் உறுப்பினர்கள் கைப்பைகள் உள்பட எந்த வித பைகளையும் எடுத்து வர வேண்டாம். (பைபிள், தண்ணீர் பாட்டில்கள் தவிர்த்து) ஆலயத்தின் முதன்மை நுழைவுவாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் போலீசாரிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போலீசாரின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தேவாலயங்களுக்கு சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் வந்தால், அவர்களை ஆலயத்தின் காவலாளிகள் விசாரிக்கிறார்கள். சோதனையும் செய்கிறார்கள். பிரார்த்தனை நடைபெறுகிற சமயங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதே போன்று பல தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்