உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-04-28 23:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் புதுவை அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். எந்த காரணமும் இல்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக புதுவையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 243–ன் கீழ் மற்றும் புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டங்களின் படியும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சமீபத்தில் புதுவை அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கிலும், இந்த நடைமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதுவை அரசு இதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி வருகிறது. உள்ளாட்சித்துறை 27 மாதங்களுக்கு பிறகு வரைவு சீரமைப்பு அறிக்கையை இறுதி செய்து கவர்னரின் ஒப்புதல் பெற்று 7.3.2019 அன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது. சீரமைப்பு பணி திருப்திகரமாக முடிவடைந்துள்ளது.

எல்லா நகராட்சிகளிலும் கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் 2011–ம் ஆண்டு மக்கள் தொகைப்படி வார்டுகள் சமமான மக்கள் எண்ணிக்கையுடன் பிரிக்கப்பட்டு உள்ளன. யூனியன் பிரதேசத்தில் உள்ள 10 நகராட்சிகள் 116 வார்டுகளாகவும், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கள் 108 கிராம பஞ்சாயத்துக்களாகவும், 842 பஞ்சாயத்து வார்டுகளாவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இடஒதுக்கீட்டு கொள்கையும் பின்பற்றப்பட்டுள்ளன. எந்த சீரமைப்பு பணி முடியவில்லை என்று அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியதோ அந்த பணியும் முறையாக முடிவடைந்து அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாகி உள்ளது.

முதல்–அமைச்சர் இந்த தேர்தலை மேலும் தாமதப்படுத்த புதிய காரணங்களை கண்டுபிடிக்காமல் ஜனநாயக உணர்வோடு தனது அமைச்சரவையை கலந்தாலோசித்து உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் மத்தியில் இருந்து வரும் நிதி வராது. இதனால் வளர்ச்சி வாய்ப்புகள் தடைபடும். அடித்தள மக்களுக்கான உரிமைகளும் பாதிக்கப்படும். அரசு தயக்கமின்றியும், கவுரவம் பார்க்காமலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தினால் உச்சநீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்