சேலம், தாரமங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது
சேலம், தாரமங்கலத்தில் பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் அன்னதானப்பட்டியில் கே.பி.கரடு மலை அடிவாரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடி கொண்டு இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இருந்தபோதிலும் சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட நெத்திமேடு பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 35), கார்த்திக் (25), குமார் (27), சுந்தர்ராஜன் (42), பாஸ்கர் (25), கிஷோர் (25), பாண்டியன் (28), வெங்கடேசன் (35), பழனிசாமி (32) உள்பட 13 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
இதேபோல் தாரமங்கலம் சந்தைபேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்றனர்.
அங்கு சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த செந்தில் குமார்(45), பழனிகுமார்(30), கருக்கல்பட்டியை சேர்ந்த தங்கராஜ்(30), நாகி ரெட்டியூரை சேர்ந்த சுரேஷ்குமார்(38) ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 4 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். அவர்களிடமிருந்து ரூ.200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.