நான்கு வழிச்சாலையில் அதிக பாரங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

விருதுநகர்–மதுரை–வாடிப்பட்டி, மதுரை–மேலூர் நான்கு வழிச்சாலைகளில் அதிக பாரங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2019-04-28 22:15 GMT

திருமங்கலம்,

மதுரை–விருதுநகர்–வாடிப்பட்டி–திண்டுக்கல் மற்றும் மதுரை–மேலூர்–திருச்சி நான்கு வழிச்சாலைகளில் வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களுக்கும் அதிக அளவு சரக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இவ்வாறு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகளில் பெரும்பாலும் அளவுக்கு அதிகமாக பாரங்கள் ஏற்றப்படுகின்றன. அதிக பாரங்கள் ஏற்றப்பட்ட லாரி உள்ளிட்ட கனரக வானகங்கள் நான்கு வழிச்சாலையில் செல்லும் போது பாரங்கள் ஒருபுறம் சரிந்த நிலையில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அந்த வாகனங்களை கடந்து செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாகவும், விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதிக பாரம் காரணமாக சில வேளைகளில் கனரக வாகனங்கள் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலூர் அருகே சிட்டம்பட்டி நான்கு வழிச்சாலையில் நெல் மூடைகள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, அதிக பாரம் தாங்காமல் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இதுபோன்று அளவுக்கு அதிகமாக பாரங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கும், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நான்கு வழிச்சாலையில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், நெல்லை இடைப்பட்ட இடங்களில் அடிக்கடி அதிக பாரங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் அளவுக்கு அதிகமாக சரக்குகள் ஏற்றும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது விபத்துகளை தடுக்க முடியும் என்றனர்.

மேலும் செய்திகள்