மதுரை அருகே வீட்டின் சுவரை இடித்து மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை 105 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது

மதுரையை அடுத்த மேலூரில் 105 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஐம்பொன் அம்மன் சிலை வீட்டின் சுவரில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுவரை இடித்து அந்த சிலையை போலீசார் மீட்டனர்.

Update: 2019-04-28 22:30 GMT

மேலூர்,

மதுரை மாவட்டம், மேலூரில் சிவன் கோவில் அருகில் பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1915–ம் ஆண்டு 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன உற்சவர் அம்மன் சிலை இருந்துள்ளது. அதன்பிறகு அந்த சிலை காணாமல் போனது.

இது குறித்து அப்போது இருந்த ஆங்கிலேய போலீசாரிடம் கோவில் பூசாரி புகார் கொடுத்திருந்தார். அந்த சிலை மூன்று கண்களுடன் முகத்தில் சில அடையாளங்களுடன் இருந்ததாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் நகல் 105 ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் கோவில் பக்தர்களிடம் கிடைத்தது. கோவிலில் உற்சவர் சிலை இல்லாமல் இருப்பது பக்தர்களை வருத்தமடைய செய்தது.

இதுதொடர்பாக விசாரித்ததில், 105 ஆண்டுகளுக்கு முன்பு 2 பூசாரிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் ஒரு பூசாரி, உற்சவர் அம்மன் சிலையை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வழிபட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் நாராயணன் பூசாரி என்பவர், மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 105 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன உற்சவர் அம்மன் சிலையை எடுத்த பூசாரி, தான் வசித்து வந்த ஒரு குறிப்பிட்ட வீட்டில் மறைத்து வைத்து இருக்கலாம் என்றும், அதனை மீட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அந்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மலைச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மேலூர் கிராம நிர்வாக அதிகாரிகள் ரவிச்சந்திரபிரபு, தனிப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிச்சை, கோவில் பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் குறிப்பிட்ட அந்த வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் சுவரை அதிகாரிகள் இடித்தனர். அப்போது சுவரினுள் அம்மன் சிலை இருந்தது. இதனைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த சிலையை அதிகாரிகள் மீட்டனர்.

அந்த சிலை பழையபடி உற்சவர் சிலையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் அங்கு கூடி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த சிலை திருடு போகவோ, கடத்தப்படவோ இல்லை என்றும், 105 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்களிடையே ஏற்பட்ட மன வருத்தத்தால் பிரிந்து தனித்தனியே வழிபட்டு வந்துள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

கோவில் நிர்வாகிகள் மேலும் கூறும்போது, வீட்டில் சாமி சிலையை வைக்கக்கூடாது என்ற ஐதீகம் உள்ளது. இதனால் சுவரினுள் அந்த பூசாரி சிலையை மறைத்து வைத்து வழிபட்டு வந்துள்ளார் என்றனர்.

சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) மேலூர் வருகிறார். அவர் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்று சிலைகள் எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா அல்லது சிலை கடத்தல் மற்றும் திருட்டு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்