கோவையில் அதிக வட்டி தருவதாகக்கூறி நிதிநிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி - 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கோவையில், அதிக வட்டி தருவதாகக்கூறி நிதிநிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை,
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் குறிஞ்சி என்கிற குறிஞ்சிநாதன் (வயது 35). இவர் அதேப்பகுதியை சேர்ந்த கதிர்வேல், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அருணாரெமி ஆகியோருடன் சேர்ந்து மேட்டூரில் முல்லை குரூப்ஸ், முல்லை நிதி நிறுவனம், முல்லை ஜூவல்லரி ஆகியவற்றை தொடங்கினார்.
பின்னர் அவர்கள் இங்கு முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக கூறினார்கள். அதாவது ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் வட்டியுடன் சேர்த்து 2 மாதத்தில் ரூ.50 ஆயிரம் திரும்ப கொடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதுதவிர பல கவர்ச்சிகரமான திட்டங்களையும் அவர்கள் அறிவித்தனர். அதுபோன்று ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், கோவை பகுதிகளில் தங்களின் கிளையை தொடங்கினார்கள்.
கோவை டாடாபாத்தில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அதில் கோவை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்தனர். அவர்களுக்கு சில மாதங்கள் மட்டும் பணம் திரும்ப கொடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் கொடுக்கவில்லை.
பணம் செலுத்தியவர்கள் அந்த நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது, விரைவில் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அசலையும், வட்டியையும் கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து முதலீடு செய்தவர்கள், வட்டியை கொடுக்க வேண்டாம், நாங்கள் செலுத்தி அசலையாவது கொடுங்கள் என்று கேட்டனர். அதற்கு அவர்கள் விரைவில் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் பணத்தை கொடுக்காமல் தலைமறைவானார்கள்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் குறிஞ்சிநாதன் உள்பட 5 பேர் கோவையில் மட்டும் அதிக வட்டி கொடுப்பதாக பலரிடம் ரூ.1 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, ‘கோவையில் முல்லை நிதிநிறுவனம் நடத்தி இதுவரை 120 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க மேட்டூரில் முகாமிட்டு உள்ளோம். அவர்களை விரைவில் பிடித்து விடுவோம். இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக புகார் செய்யலாம்’ என்றனர்.