திருப்பாச்சேத்தி பகுதிகளில் பலத்த காற்றால் வாழைகள் சாய்ந்து விழுந்தன

திருப்பாச்சேத்தி பகுதிகளில் பலத்த காற்றால் வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2019-04-28 22:00 GMT

மானாமதுரை,

திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் மழவராயனேந்தல், கானூர், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றால் வாழைகள் சாய்ந்து விழுந்ததில் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 1,400 மரங்கள் வரை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். வாழைகள் நடவு செய்த 10–வது மாதத்தில் காய்கள் பிடிக்க ஆரம்பிக்கும். 12–வது மாதத்தில் வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

அதன்பின் வாரத்திற்கு ஒரு முறை இலைகள் வெட்டப்பட்டு மார்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படும். திருப்பாச்சேத்தி சுற்றுவட்டார பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் நாட்டு வாழை, ஒட்டு வாழை உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டுள்ளன. மற்ற பகுதி வாழை இலைகளை விட திருப்பாச்சேத்தி வாழை இலைகளுக்கு மவுசு அதிகம் என்பதால் மார்கெட்டில் வாழை இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். தற்போது கடும் வறட்சி காரணமாக பெரும்பாலான விவசாயிகள் வாழை பயிரிடுவதை நிறுத்தி விட்டனர்.

கிணற்று பாசனம் செய்யும் விவசாயிகள் மட்டுமே வாழை பயிரிட்டுள்ளனர். தற்போது திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசே‌ஷ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதால், வியாபாரிகளிடம் விவசாயிகள் முன்பணம் வாங்கியிருந்தனர்.

ஆனால் தற்போது வீசிய பலத்த காற்று காரணமாக மழவராயனேந்தல், கானு£ர் உள்ளிட்ட பகுதிகளில் வாழைகள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் ஏக்கருக்கு 1,400 வாழைகள் நடவு செய்துள்ள நிலையில் 1000–க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

இதையறிந்த மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் நெட்டூர் நாகராஜன் நேற்று காலை விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மழவராயனேந்தல், கானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பல விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யாததால், அரசு அதிகாரிகள் இழப்பீடு இல்லை என கூறுவதாகவும், எனவே பயிர் இழப்பீடு பெற்று தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த வாழைகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க அமைச்சர் பாஸ்கரனிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். மேலும் கலெக்டரிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடன் மழவராயனேந்தல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், இளங்கோ, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்