பொங்கலூரில் பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் கதி என்ன? தீயணைப்பு வீரர்கள் இன்று தேடுகிறார்கள்

பொங்கலூரில் பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தீயணைப்பு வீரர்கள் இன்று தேடுகிறார்கள்.

Update: 2019-04-28 22:45 GMT

பொங்கலூர்,

கோவை மதுக்கரையை சேர்ந்த செல்லதுரை என்பவரது மகன் கார்த்திகேயன்(வயது 27). இவருக்கும் பொங்கலூர் அய்யப்பநகரில் உள்ள செந்தில் என்பவரது மகள் பரிமளாவுக்கும்(24) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கார்த்திகேயன் தனது மாமனார் செந்தில் வீட்டில் தங்கிக்கொண்டு பொங்கலூர் சக்தி நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிஸ்கட் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பொங்கலூர், நாராயணநாயக்கன்புதூர் அருகே செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் தனது நண்பர்களுடன் கார்த்திகேயன் குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது வாய்க்காலின் குறுக்காக போடப்பட்டுள்ள இரும்பு பாலத்தின் மேல் இருந்து வாய்க்காலின் உள்ளே அவர் குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திகேயன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடன் இருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கார்த்திகேயனை பல அடி தூரம் சென்று விட்டார். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் அவரது உறவினர்கள் பி.ஏ.பி வாய்க்கால் முழுவதும் தேடினார்கள். ஆனால் கார்த்திகேயனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி வரை தேடியும் கார்த்திகேயனை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பி.ஏ.பி வாய்க்கால் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட கார்த்திகேயன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இன்று(திங்கட்கிழமை) பி.ஏ.பி. வாய்க்காலில் தீயணைப்பு துறையினர் கார்த்திகேயனை தேடுகின்றனர்.

மேலும் செய்திகள்