தொப்பூர் கணவாயில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர்கள் காயம்

தொப்பூர் கணவாயில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2019-04-28 22:45 GMT
நல்லம்பள்ளி,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து வெங்காய பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்றது. இந்த லாரியை பொள்ளாச்சி அருகே உள்ள வாழை கொம்பு நாகூர் பகுதியை சேர்ந்த பிரவின்குமார்(வயது30) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக அதேபகுதியை சேர்ந்த செல்வராஜ்(26) என்பவர் உடன் வந்தார்.

இந்த லாரி நேற்று மதியம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சரிந்து சாலையில் கொட்டியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் பிரவின்குமார், செல்வராஜ் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தொப்பூர் போலீசாருக்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்த இடிபாடுகளில் சிக்கிய டிரைவர்களை மீட்டனர். பின்னர் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற வாகனங்களை சேலம்- தர்மபுரி மார்க்கமாக திருப்பிவிட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்தவிபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்