திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் தாறுமாறாக ஓடிய டிரெய்லர் லாரி சாலையின் மறுபுறம் சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் தாறுமாறாக ஓடிய டிரெய்லர் லாரி சாலையின் மறுபுறம் சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது.;

Update: 2019-04-28 23:00 GMT
திருச்சி,

கடலூர் மாவட்டம், பென்னாடம் அருகே இருந்து தூத்துக்குடிக்கு டிரெய்லர் லாரி ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் குமார் (வயது 35) ஓட்டினார். அதில் சிமெண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றி வரப்பட்டன. இந்தநிலையில் நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த டிரெய்லர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை தாண்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து நிற்காமல் அணுகுசாலையும் தாண்டி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி, அதன் பக்கம் இருந்த தனியார் இடத்தின் சுற்றுச்சுவரை உடைத்து பாய்ந்து நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரி டிரைவர் குமார் படுகாயமடைந்தார். அவர் அருகில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

லாரி மோதியதில் மின்கம்பம் வளைந்தது. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது. சுற்றுச்சுவரின் மேல் லாரியின் முன்பக்கம் அந்தரத்தில் நின்றது. லாரி 2 சாலைகளை தாண்டி மறுபுறம் வந்தபோது அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அந்த நேரத்தில் இரு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் ஏதேனும் வந்திருந்தால் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லாரியை மீட்கும் பணி நேற்று மாலைக்கு மேல் நடந்தது. 

மேலும் செய்திகள்