ஈரோடு– கோவை பயணிகள் ரெயில் தொடர்ந்து இயக்கம் ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ஈரோடு– கோவை பயணிகள் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Update: 2019-04-28 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு முதல் பாலக்காடு வரை இரு மார்க்கங்களில் இயக்கப்பட்ட பயணிகள் ரெயில் கடந்த 1–ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை தற்காலிகமாக ஈரோடு–கோவை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் தொடர்ந்து இந்த ரெயில் வியாழக்கிழமை தவிர்த்து பிற நாட்களில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் இந்த ரெயில் காலை 10.15 மணிக்கு கோவை சென்றடையும். மாலை 4.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இரவு 7.05 மணிக்கு ஈரோடு வந்தடையும்.

இந்த ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்த முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாட்ஷா கூறும்போது, ‘ஈரோடு–பாலக்காடு பயணிகள் ரெயில் கோவை வரை தொடர்ந்து இயக்கப்படும் என்ற ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

பாலக்காடு வரை இயக்கப்படாத நிலையில், இந்த ரெயிலை சேலத்தில் இருந்து கோவை வரை இயக்க வேண்டும். இந்த ரெயிலை இயக்க வலியுறுத்திய ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்