கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; மனைவி, கள்ளக்காதலன் கைது

பொம்மிடி அருகே கள்ள தொடர்புக்கு இடையூறாக இருந்த தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-28 22:45 GMT
பொம்மிடி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள சிக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பாத்தி (28). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு திவாகர், திலீப் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதேபகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(30). இவரும், சுரேசும் நண்பர்கள். இதனால் வினோத்குமார் அடிக்கடி சுரேஷ் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது பார்வதிக்கும், வினோத்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஜனவரி மாதம் சுரேசும், வினோத்குமாரும் மது குடித்துள்ளனர். அப்போது சுரேசுக்கு மதுவில் விஷம் கலந்து வினோத்குமார் கொடுத்துள்ளார். இதனால் சுரேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் வினோத்குமாரும், பார்வதியும் சேர்ந்து டானிக்கில் தூக்க மாத்திரைகள் கலந்து சுரேசுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுரேசிடம், எங்கள் கள்ளத்தொடர்பை வெளியில் தெரியபடுத்தினால் உயிரோடு விடமாட்டேன் என்று கூறி வினோத்குமார் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சுரேஷ், கள்ளத்தொடர்பை கைவிடுமாறு மனைவி பார்வதிக்கு அறிவுரை கூறி உள்ளார். இதனிடையே சம்பவத்தன்று சுரேஷ் பொம்மிடிக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பிய போது பார்வதியை காணவில்லை.

இதனால் அவர் பல்வேறு இடங்களில் மனைவியை தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அப்போது வினோத்குமார் பார்வதியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சுரேஷ் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், பார்வதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்