தேன்கனிக்கோட்டை அருகே சிறுவர்களை கடத்தி கொத்தடிமைகளாக விற்பனை மலை கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே சிறுவர்களை கடத்தி கொத்தடிமைகளாக ஒரு கும்பல் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து மலை கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-28 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

இது பற்றிய விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூர் கொல்லை சித்திக் நகரை சேர்ந்தவர் கட்டிகான். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 4-வது மகன் மாதேஷ் (வயது12). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த மாதேஷ் திடீரென காணாமல் போனான்.

இதனையடுத்து அவனை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் கட்டிகான், அதேபகுதியை மாதையனிடம் தனது மகன் மாயமானது குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாதையன் உள்ளிட்டவர்கள் கட்டிகானை தாக்கி உள்ளனர். மகன் கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து கட்டிகான் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு கும்பல் பணத்திற்காக மாணவன் மாதேசை கடத்தி கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை தோட்டத்தில் விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து கடத்தல் கும்பலிடம் இருந்து மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், கோட்டையூர் கொல்லை சித்திக் நகரை சேர்ந்த மலைவாழ் சிறுவர்களை ஒரு கும்பல் ஆசைவார்த்தை கூறி கடத்தி கொத்தடிமைகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த பகுதியில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட சிறுவர்களை அந்த கும்பல் கடத்தி சென்றுள்ளது. இதனால் கடத்தப்பட்ட சிறுவர்களை மீட்கவும், கடத்தல் கும்பலை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மலை கிராமமான கோட்டையூர் கொல்லை சித்திக் நகருக்கு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலை கிராமத்தில் சிறுவர்கள் கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்