இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பஸ், ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு,
இலங்கையில் கடந்த 21-ந் தேதி 8 இடங்களில் தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இலங்கையில் குண்டுவெடிப்பு
இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களில் 10 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
குமாரசாமி உத்தரவு
இதற்கிடையில், நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கர்நாடகம், தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதால் கர்நாடகத்தில் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் ஆகியோருக்கு முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முக்கிய நகரங்கள், ரெயில், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களை 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கும்படியும், கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷாராக இருக்கும்படியும், போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு நகரில் தீவிர சோதனை
இதையடுத்து பெங்களூருவில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகள் மோப்பநாய்களை பயன் படுத்தி சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இந்த சோதனையை நேற்று போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்டனர். மேலும் பெங்களூரு விதானசவுதா உள்பட முக்கிய கட்டிடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகப்படும் படியாக சுற்றும் நபர் மற்றும் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் ஆகியவற்றை பார்த்தால் அதுபற்றி அருகே உள்ள போலீஸ் நிலையங் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
மாநிலம் முழுவதும்...
அதுபோல் மாநிலம் முழுவதும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய வீதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர கர்நாடகம்-தமிழ்நாடு, கர்நாடகம்-ஆந்திரா, கர்நாடகம்-மராட்டியம், கர்நாடகம்-கேரளா ஆகிய எல்லைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கடலோர கர்நாடக மாவட்டங்களில் கடல் வழியாக பயங்கரவாதிகள் வருகிறார்களா? என்பதை கடலோர காவல்படையினர் ரோந்து பணி செய்து கண்காணித்து வருகிறார்கள்.