சித்தரபெட்டா தர்காவுக்கு சென்றபோது சம்பவம் ஒரே குடும்பத்தினர் உள்பட 5 பேர் குளத்தில் மூழ்கி பலி பெங்களூருவை சேர்ந்தவர்கள்

சித்தரபெட்டா தர்காவுக்கு சென்றபோது குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தினர் உள்பட 5 பேர் பலியானார்கள். இவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.;

Update: 2019-04-27 22:09 GMT
பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா டாபஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சித்தரபெட்டா சுற்றுலாதலம் உள்ளது. இங்கு சிவன் கோவில் மற்றும் தர்கா அமைந்து உள்ளது.

இந்த நிலையில், நேற்று பெங்களூரு தனிச்சந்திரா அருகே உள்ள ஹெக்டே நகரில் வசித்து வருபவர்கள் 2 ஆட்டோக்களில் சித்தரபெட்டாவுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்குள்ள குளத்தின் அருகே நின்றனர்.

5 பேர் பலி

அப்போது, உஸ்மான் (வயது 14) என்ற சிறுவன் குளத்து தண்ணீரில் இறங்கி குளிக்க முயன்றான். எதிர்பாராத விதமாக அவன் தண்ணீரில் தவறி விழுந்தான். அவனை காப்பாற்ற அவனுடைய அக்காள் முபீனா (18), இன்னொரு அக்காள் ரேஷ்மா (20) ஆகியோர் குளத்தில் குதித்தனர். அப்போது, அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதை பார்த்தவுடன் அவர்கள் 3 பேரையும் காப்பாற்ற உஸ்மானின் அண்ணன் யாரப் (22), பக்கத்து வீட்டுக்காரரான முனீர் (49) ஆகியோர் தண்ணீரில் இறங்கினர். இருப்பினும் அவர்கள் 5 பேரும் அடுத்தடுத்து குளத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடல்கள் மீட்பு

இதுகுறித்து அறிந்தவுடன் டாபஸ்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தண்ணீரில் மூழ்கி இறந்த உஸ்மான் உள்பட 5 பேரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பின்னர், அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் டாபஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுற்றுலா சென்ற இடத்தில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் இறந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்