பிறந்தநாள் கொண்டாட வனப்பகுதியில் திரண்ட ரவுடிகள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்
ஊரப்பாக்கம் அருகே இறந்த ரவுடியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக வனப்பகுதியில் திரண்ட அவரது ஆதரவாளர்களான ரவுடிகள் போலீசை கண்டதும் தப்பி ஓடினர்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 26). பிரபல ரவுடியான இவர் இறந்து விட்டார். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் ஊரப்பாக்கம் அருகே உள்ள வனப்பகுதியில் நள்ளிரவில் அவரது ஆதரவாளர்களான 50 ரவுடிகள் சேர்ந்து பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்படி பிறந்தநாளில் கலந்து கொள்பவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிறந்த நாள் கேக்கும் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது.
ரவுடிகள் ஓட்டம்
மேலும் வனப்பகுதியை சுற்றி மறைந்த ரவுடி விக்னேசுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி டிஜிட்டல் பேனர்கள் வைத்து கொண்டு இருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் மறைந்த ரவுடி விக்னேஷின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்கு அவரது ஆதரவாளர்கள் 50 ரவுடிகள் வனப்பகுதியில் தயார் நிலையில் இருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த 10-க்கும் மேற்பட்ட ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்ட ரவுடிகள் 50 பேரும், அங்கிருந்து தப்பி நாலாபுறமும் சிதறி ஓடி அருகில் உள்ள காட்டுக்குள் பதுங்கி விட்டனர். போலீசார் இரவு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் யாரும் சிக்கவில்லை.
வனப்பகுதியில் மறைந்த ரவுடியை வாழ்த்தி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை போலீசார் அகற்றினார்கள், இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.