திருவல்லிக்கேணியில் திருநங்கையை திருமணம் செய்த தொழிலாளி மர்மச்சாவு கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
திருவல்லிக்கேணியில் திருநங்கையை திருமணம் செய்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). தொழிலாளியான இவர், திருவல்லிக்கேணியில் தங்கி சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அஜித்குமார் நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் கழுத்தில் கத்திகுத்து காயங்களுடன் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அஜித்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநங்கையுடன் திருமணம்
இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அஜித்குமார் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த திருநங்கையான ரதியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, திருவல்லிக்கேணியில் ஒரே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் அஜித்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து திருநங்கை ரதியின் செல்போனை போலீசார் தொடர்பு கொண்ட போது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே அஜித்குமாரின் சாவில் மர்மம் நீடிக்கிறது. இதையடுத்து அஜித்குமார் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.