‘இலங்கையைபோல கோயம்பேட்டிலும் குண்டு வெடிக்கும்’ வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

இலங்கையை போல கோயம்பேட்டிலும் குண்டு வெடிக்கும் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-04-27 23:00 GMT
பூந்தமல்லி,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன், கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த மர்மநபர் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியவர் கோயம்பேடு ஆழ்வார்திருநகரை சேர்ந்த மைக்கேல் பிரீடி (வயது 43) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர்.

கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்து விசாரித்தபோது மது குடிக்கும் பழக்கம் உடைய மைக்கேல் பிரீடி தனியார் நிறுவனங்களில் அலுமினிய கதவுகள் செய்யும் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தபோது இலங்கையில் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பாக செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. மேலும் மனைவியுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. வேலை செய்த இடத்தில் சக ஊழியரான இலங்கை தமிழர் ஒருவர் எந்திரத்தை எடுத்து சென்று விட்டு திரும்ப தராமல் இருந்து வந்தார்.

இந்த சம்பவங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைதான மைக்கேல் பிரீடி தெரிவித்தார். இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்