பஞ்சப்பள்ளியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பஞ்சப்பள்ளியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2019-04-27 23:00 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கரகூர், ஜெல்திம்மனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு பஞ்சப்பள்ளி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடும் வறட்சியின் காரணமாக இந்த அணை வறண்டது. இதனால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் பஞ்சப்பள்ளி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனால் இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

இந்தநிலையில் பஞ்சப்பள்ளி, கரகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் பஞ்சப்பள்ளி 4 ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்