கனமழைக்கு வாய்ப்பு: தயார் நிலையில் தீயணைப்பு துறையினர் பாதிப்பு ஏற்படும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2019-04-27 22:15 GMT
வேலூர்,

கோடைகாலம் தொடங்கிய நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனினும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இந்த கோடை மழை வேலூர் பக்கம் திரும்பாதா? என விவசாயிகள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வடதமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் எதிர்வரும் மழையின் போது ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் கடக்கும் வரை அவர்கள் பணியில் ஈடுபடுவார்கள். தீயணைப்பு வாகனங்கள், மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் கடலோர மாவட்டங்களுக்கு இங்கிருந்து வீரர்களையும், வாகனங்களையும் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

வேலூர் மாநகர் பகுதியில் மழை பெய்தால் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களான கன்சால்பேட்டை, சம்பத்நகர், பத்மாவதிநகர், கஸ்பா, கன்டோன்மென்ட் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம், தாசில்தார் ரமேஷ் மற்றும் தீயணைப்பு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாயை சீரமைத்து மழைநீர் விரைந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உதவி கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவித்தார். தேவைப்படும் இடங்களில் கால்வாயை அகலப்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்