முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி 4 பேர் கைது

முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-27 22:15 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 26). நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 7 பேர் கொண்ட கும்பல், திடீரென சரத்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய சரத்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

4 பேர் கைது

இதுபற்றி பேசின்பிரிட்ஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பை சேர்ந்த ரூபன் (31), சூர்யா (27), வியாசர்பாடியை சேர்ந்த கருப்பு (28) மற்றும் விஜயன்(23) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில், முன்விரோதம் காரணமாக ரூபனுக்கும், சரத்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஏற்கனவே ரூபனை, சரத்குமார் கத்தியால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த ரூபன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதற்கு பழிக்குப்பழி வாங்கவே ரூபன், தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து சரத்குமாரை கத்தியால் வெட்டி கொலை செய்யமுயன்றது தெரிந்தது. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்