பானி புயல் முன்எச்சரிக்கை பாதிப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை

பானி புயல் முன்னெச்சரிக்கையாக தென்னை மரங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Update: 2019-04-27 22:45 GMT

பனைக்குளம்,

கனமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினை தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வீரராகவராவ் நேற்று பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மண்டபம் யூனியன் பெருங்குளம் அருகே உள்ள வாணியன்குளம் கிராமத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை சூழ்நிலைகளின் போது தென்னை மரங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடும் விதமாக சம்மந்தப்பட்ட விவசாயிகள் மூலம் வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:– இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும், இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் உடனடி மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 5 ஆயிரத்து 500 முதன்மை மீட்புக்குழு நபர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்களிப்பு செய்திடும் விதமாக 15 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தகுழு அலுவலர்கள் மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்க கூடியதாக கண்டறியப்பட்டுள்ள 39 தாழ்வான பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர கால சூழ்நிலையில் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும், 145 பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 237 கிலோமீட்டர் நீள அளவில் கடற்கரையும், 180 மீனவ கிராமங்களும் உள்ளன. 1,520 மீன்பிடி விசைப்படகுகளும், 4 ஆயிரத்து 767 மீன்பிடி நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று வீசும்போது தென்னை, மா, பலா போன்ற பயன் தரும் மரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்கும் விதமாக விவசாயிகளுக்கு சில எளிய முறையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 652 எக்டர் பரப்பளவில் தென்னை மரங்கள் உள்ளன. குறிப்பாக மண்டபம், ராமநாதபுரம், திருப்புல்லானி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளன.

இதேபோல 586 எக்டர் பரப்பளவில் பழ வகைப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

தென்னை மரங்களை பொருத்தவரையில் தலைப்பாகத்தில் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை போன்றவை அதிகம் இருந்தால், காற்றின் வேகத்தினால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ, முறிந்து விழுவதற்கோ வழிவகுக்கும். எனவே இளம் மட்டைகளை தவிர்த்து மீதமுள்ள பச்சை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் போன்றவற்றை அகற்றிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல புயல் மழை போன்றவற்றை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு முன்பாக தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இருகி, மரம் சாய்ந்து விடாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு வாய்ப்பாக அமையும். மா, பலா, முந்திரி போன்ற பழ வகை மரங்களிலும் காற்று வீசும் சமயம் காற்று மரங்களின் ஊடே புகுந்து செல்லும் வகையில் அதிகப்படியான கிளைகளை கவாத்து செய்வதன் மூலம் மரம் வேரோடு சாயும் சூழ்நிலையை தவிர்க்கலாம். மேலும் பாதிப்புகளையும் குறைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை துறை இணை இயக்குனர் செல்வராஜன், துணை இயக்குனர் சொர்ணமாணிக்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, உதவி இயக்குனர் நாகராஜன், தென்னை விவசாயி இஸ்மாயில், தென்னை விவசாயிகள் சங்க தலைவர் சேகு ரகுமத்துல்லா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்