மேலப்பாளையத்தில் 6 ஆடுகளை கொன்ற மர்ம நபர்கள்
மேலப்பாளையத்தில் 6 ஆடுகளை கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் ரகுமானியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் பாதுஷா (வயது 19). இவருடைய அண்ணன் ஹக்கீம். இவர்கள் 2 பேரும் சேர்ந்து வீட்டில் 7 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை முகமது இப்ராகிம் பாதுஷா, ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 6 ஆடுகள் காது அறுக்கப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டு கிடந்தன. ஒரு ஆடு மட்டும் காது அறுபட்ட நிலையில் உயிருடன் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது இப்ராகிம் பாதுஷா, உடனடியாக இதுபற்றி மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர், தன்னுடைய அண்ணன் ஹக்கீமுக்கும், பத்தமடை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. எனவே அதுதொடர்பாக ஆடுகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆடுகளை கொன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.