திசையன்விளையில் கார் மோதி மாணவன் பலி: உறவினர்கள் சாலை மறியல்; 125 பேர் கைது பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திசையன்விளையில் கார் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் காரில் வந்த பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-27 22:15 GMT
திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலிவிளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மகன் ஸ்ரீஜன் (வயது 13). இவர்கள் குடும்பத்துடன் வள்ளியூரில் வசித்து வருகின்றனர். ஸ்ரீஜன் அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிக்கூட விடுமுறையையொட்டி திசையன்விளை மணலிவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு ஸ்ரீஜன் சென்றுள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீஜன் திசையன்விளை புறவழிச்சாலையில் சைக்கிளில் சென்றான். அப்போது அந்த வழியாக திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகி பயணம் செய்த கார் எதிர்பாராதவிதமாக ஸ்ரீஜன் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவன் படுகாயமடைந்தான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீஜன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜுடி வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சரண்ராஜ் (25) என்பவரை கைது செய்தார்.

இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த தனியார் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று காலை திசையன்விளை மணலிவிளை எம்.ஜி.ஆர். பஸ்நிறுத்தம் முன்பு மாணவனின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்